புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் புயல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மூவேந்தர் நகர், தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புயல் தாக்கி 7 நாட்கள் ஆகியும் இதுவரை மின் வினியோகம், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நகர், மூவேந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக மின்சார ஊழியர்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் உங்களுக்கு இன்று இந்த பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே நீங்கள் வேறு பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுங்கள் என கூறினார்.

இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட மின்சார வாரிய ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு மீட்பு பணிக்காக வந்த மின்சார ஊழியர்களை வேறு பகுதிக்கு அனுப்பி அதிகாரி களை கண்டித்தும் உடனடியாக எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அசோக் நகர் பஸ் நிறுத்தம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவரங்குளம் வாண்டார்பேட்டையில் பொதுமக்கள் குடிநீர், மின் சாரம் வழங்கக்கோரி புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லாத்திராகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story