கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் வழங்கினார்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

தஞ்சை,

கஜா புயலால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் வழங்கும் பணியை ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதி்க்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 692 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளில் சுமார் 500 மாணவ- மாணவிகளின் பாடப்புத்தகங்கள் இப்புயலில் சேதம் அடைந்ததாக கண்டறியப்பட்டு, தற்போது புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மேலும், புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் கூடுதல் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை 40,850 பாடப்புத்தகங்களும், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ள இரு மாவட்டங்களுக்கு 78,800 பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தொய்வின்றி கல்வி பயில பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ராகவாம்பாள்புரம், நார்தேவன் குடிகாடு, மூர்த்தியாம்பாள்புரம், நெய்வாசல் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., பரசுராமன் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story