நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு திடீர் நிறுத்தம் - விவசாயிகள் வேதனை


நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு திடீர் நிறுத்தம் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 22 Nov 2018 9:45 PM GMT (Updated: 22 Nov 2018 10:34 PM GMT)

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய்க்கு நீர் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கால்வாயில் நீர் நிறுத்தப்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டில் நிலையூர் கண்மாய் அமைந்து உள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் உருவான இந்த கண்மாயானது 22 அடி ஆழம் உடையது. இந்த கண்மாயின் கரையில் சிறியது, பெரியது என 2 கழுங்குகள் உள்ளன. மேலும் கண்மாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடிய 3 மடைகளும் உள்ளன.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் பட்சத்தில் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக சோழவந்தான் முள்ளிப்பள்ளம் அருகில் இருந்து நிலையூர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயானது திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டியில் 3 பிரிவுகளாக செல்கிறது.

இத்தகைய கண்மாய்க்கு கடந்த 7 ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரத்து இல்லை. பருவ மழையும் பொய்த்து விட்டது. அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் பிழைப்புக்கு வழி இல்லாமல் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் இருப்பு நன்றாக இருந்ததால் நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து நிலையூர் கண்மாய்க்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில சமீபத்தில் பெய்த தொடர் கன மழையாலும் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு நிலையூர் கண்மாயும் நிரம்பி சின்ன கழுங்கு வழியாக மறுகால் பாய்ந்தது. அதைக் கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் கண்மாய் முழுமையாக நிரம்ப வில்லை.

22 அடி ஆழம் கொண்ட கண்மாயில் தற்போது 19 அடி ஆழத்தில் தான் தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரும் மறுகாலில் வெளியேறும் பட்சத்தில் தண்ணீர் அளவு குறையும். இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் மாடி வீடுகளுக்காக திடீரென்று நிலையூர் கால்வாய்க்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தண்ணீர் மறுகால் சென்று கொண்டிருக்கும் சின்ன கழுங்கு பகுதியில் சிலர் திடீரென்று மணல் மூட்டையால் அடைப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனை அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலீசார் கழுங்கு பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கருத்தில் கொள்ளாமல் நிலையூர் கால்வாயில் வந்து கொண்டிருந்த தண்ணீரை திடீரென்று நிறுத்தி விட்டார்கள். இது வேதனை அளிப்பதாக உள்ளது. கண்மாய் முழுமையாக நிரம்புவதற்கு இன்னும் 3 அடி தண்ணீர் தேவை. 2-ம் போக சாகுபடி செய்யவும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காகவும் தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

நிலையூர் கண்மாயில் உள்ள சின்னகழுங்கில் மறுகால் பாய்ந்த போதிலும் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும் விதத்தில் 10 கிராமங்களுக்கு தண்ணீர் போக கூடிய பெரிய கழுங்கு பகுதி முழுவதுமாக முட்கள் வளர்ந்து புதராக உள்ளது. அதனை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story