விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: பெண் உள்பட 2 பேர் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2018 10:41 PM GMT (Updated: 22 Nov 2018 10:41 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழைக்கு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண்ணும், மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவரும் இறந்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியார்சாவடி ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி லட்சுமி (வயது 67). இவர் மண் மூலம் கட்டப்பட்ட பழைய ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு லட்சுமி, தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின்சுவர் நனைந்து திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (46), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ராஜாங்கம் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அவர் அங்குள்ள மின் மோட்டார் கொட்டகையின் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சார பெட்டிக்கு செல்லக்கூடிய இரும்பு குழாயின் மீது தவறுதலாக கையை வைத்துவிட்டார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து கோட்டக்குப்பம் மற்றும் வளவனூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story