மழையால் 55 கிலோ மீட்டர் சாலைகள் சேதம்
மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் 55 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கஜா புயலையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, வடலூர், நெய்வேலி போன்ற பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் குண்டும், குழியுமாக மாறியது. மேலும் நகராட்சி, ஊராட்சிகளில் பல சாலைகளும் சேதமடைந்தன.
இது தவிர தற்போதும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்கனவே சேதமடைந்த சாலைகள் மேலும் வீணாகி வருகிறது. இதில் சில சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறி உள்ளன.
இது பற்றி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையில் கஜா புயலால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இந்த மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதன்படி மாவட்டத்தில் 3 இடங்களில் சாலையோரம் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி, அப்புறப்படுத்தி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,862 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைகள் உள்ளன. இதில் மழை வெள்ளத்தால் இதுவரை 55 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. அவற்றை தற்காலிகமாக சீரமைத்து வருகிறோம். மேலும் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்.
இவ்வாறு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா கூறினார்.
Related Tags :
Next Story