கடமலை-மயிலை ஒன்றியத்தில்: ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்கள் - தூர்வார விவசாயிகள் கோரிக்கை


கடமலை-மயிலை ஒன்றியத்தில்: ஆக்கிரமிப்பின் பிடியில் கண்மாய்கள் - தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2018 3:15 AM IST (Updated: 24 Nov 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 81 ஏக்கர் பரப்பளவில் சாந்தநேரி, 64 ஏக்கர் பரப்பளவில் பஞ்சந்தாங்கி உள்ளிட்ட 10 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு மூல வைகை ஆறு, மேகமலை அருவி மற்றும் ஓடைகளில் இருந்து தண்ணீர் வர வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய்களை சார்ந்து ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சில கண்மாய்கள் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கண்மாய்கள் முழுவதும் முட்செடிகள் மற்றும் மரங்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

மேலும் அனைத்து கண்மாய்களிலும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். முட்செடிகள் மற்றும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாய்களின் அளவு குறுகி காணப்படுகிறது.

கண்மாயின் அளவு குறுகி வருவதால் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் கண்மாயில் செடிகள், மரங்கள் அதிக அளவில் காணப்படுவதால், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் விரைவிலேயே வற்றி விடுகிறது. இதனால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது.

கண்மாய்களை தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கண்மாய்களில் அளவீடு செய்யும் பணிகள் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பஞ்சந்தாங்கி, சாந்தநேரி உள்ளிட்ட கண்மாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது.

இதற்கிடையே மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட நீர்வரத்து காரணமாக ஓட்டணை, அம்மாகுளம், கடமான் உள்ளிட்ட கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளது. ஆனால் பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் கண்மாய்களின் கரைகள் மிகவும பலவீனமாக உள்ளது. கண்மாய் கரைகளின் வழியாக நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் கண்மாய் கரைகள் உடைந்து விடும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story