குமரி மாவட்டத்தில் முழுஅடைப்பு நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் அவதி


குமரி மாவட்டத்தில் முழுஅடைப்பு நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிறுத்தம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 7:01 PM GMT)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

நெல்லை, 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

முழு அடைப்பு

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மீது கேரள அரசின் கெடுபிடிகள் மற்றும் சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணனை போலீசார் அவமதித்ததை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இந்த போராட்டத்தையொட்டி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவில்லை.

பஸ்கள் நிறுத்தம்

இந்தநிலையில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. குறிப்பாக நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் இடைநில்லா பஸ்கள் நேற்று காலையில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லக்கூடிய பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சிலர் வள்ளியூர் செல்கின்ற பஸ்களில் ஏறிச்சென்றனர். பஸ்கள் இயக்காததால் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே நெல்லை பஸ்நிலையத்துக்கு வந்தனர். பின்னர் பஸ்நிலையத்தில் இருந்துவிட்டு காலையில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு எழுத சென்றனர்.

Next Story