கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி - மயிலாடுதுறையில், வைகோ பேட்டி


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி - மயிலாடுதுறையில், வைகோ பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2018 3:30 AM IST (Updated: 24 Nov 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று மயிலாடு துறையில் வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குத்தாலம், 


கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்களும், மா, பலா, எலுமிச்சை, வாழை மரங்களும் விழுந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் இறந்து கிடக்கின்றன. ஒட்டு மொத்தமாக விவசாயிகளின் வாழ்வு நாசமாகி விட்டது. கஜா புயல் வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில அமைச்சர்களும், அதிகாரிகளும், மின்வாரிய ஊழியர்களும், மருத்துவ பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் நிவாரணம் வழங்குவதில் தான் குளறுபடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது அங்கு ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து பணியாற்றினார்கள். அவர்கள் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அப்படி நடக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் ஏற்பட்ட மறுநாளே பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளுக்கும் நேரடியாக சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால் மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அவநம்பிகை ஏற்பட்டு விட்டது.
புயல் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி நேரில் வந்து பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியில் ரூ.10 ஆயிரம் கோடி நிதியையாவது மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாது. காரணம், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இடம் பெயர வேண்டும்.

இங்கிருந்து பொதுமக்கள் வெளியேறினால் தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு திட்டம் போடுகிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடி அரசு ஒரு நயவஞ்சக அரசாக செயல்பட்டு வருவது தெரிகிறது. இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் மோகன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மார்கோனி, நகர செயலாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story