மாவட்டத்தில் 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய போலீசாருக்கு கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.
இவர்களில் கொலை, வழிப்பறி, திருட்டு, கொள்ளை என பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அதன்படி, சேலம் மாநகரில் இந்த ஆண்டு இதுவரை 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 98 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மாவட்டத்திலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்கின்றனர். அதைத்தொடர்ந்து இதை பரிசீலித்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிடுகிறார். மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 43 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறோ அல்லது பொது சொத்துகளை சேதப்படுத்தினாலோ அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்‘ என்றனர்.
Related Tags :
Next Story