சென்னிமலையில் லாரியை கடத்திய வாலிபர் 3 மணி நேரத்தில் கைது


சென்னிமலையில் லாரியை கடத்திய வாலிபர் 3 மணி நேரத்தில் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 11:00 PM GMT (Updated: 24 Nov 2018 7:01 PM GMT)

சென்னிமலையில் லாரியை கடத்தி சென்ற வாலிபரை சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் துரத்தி சென்று பிடித்து 3 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பொறயன்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 22). இவர் சொந்தமாக 5 லாரிகளை வைத்து தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு அவர் லாரிகளை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இவருடைய தந்தை கதிரேசன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பால் கறப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வர முற்பட்டார். அப்போது கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. உடனே அவர் இதுபற்றி அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அருகே உள்ள வீட்டை சேர்ந்தவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர். இதையடுத்து அவர் வெளியே வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு லாரியை காணவில்லை. யாரோ மர்ம நபர் லாரியை திருடி சென்றது தெரியவந்தது. அதுவும் அதிகாலை நேரத்தில் தான் லாரி திருடப்பட்டு உள்ளதையும் அவர் கண்டுபிடித்தார்.

உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இதுபற்றி காங்கேயம், ஊத்துக்குளி, பெருந்துறை போலீஸ் நிலையம, மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதற்கிடையே காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை காங்கேயம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் அந்த லாரியை வழிமறித்தனர். இதில் உஷாரான திருடன், அங்கிருந்து லாரியை திருப்பி நால்ரோடு வழியாக ஊத்துக்குளி நோக்கி சென்றான். காங்கேயம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உடனே லாரியை தொடர்ந்து துரத்தி சென்றனர். இதற்கிடையே ஊத்துக்குளி போலீசாரும் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு விஜயமங்கலம் பைபாஸ் ரோட்டில் சென்றான். உடனே பெருந்துறை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி லாரியின் வருகைக்காக காத்திருந்தனர்.

லாரிக்கு பின்னால் காங்கேயம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஊத்துக்குளி போலீசார், சென்னிமலை போலீசார் வாகனங்களில் தொடர்ந்து துரத்தி சென்றனர். ஆனால் விஜயமங்கலம் பைபாஸ் ரோட்டில் போலீசார் ஏற்படுத்திய தடுப்பையும் மீறி சினிமாவை மிஞ்சும் வகையில் லாரியை வளைத்து வளைத்து திருப்பி திருடன் ஓட்டி சென்றதால் போலீசார் திகைத்து நின்றனர்.

எனினும் போலீசார் தொடர்ந்து தங்களுடைய வாகனங்களில் துரத்தினர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை அருகே லாரியை போலீசார் மடக்கினர். ஆனால் திருடன் சட்டென்று லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்த காட்டுக்குள் ஓடி முட்புதருக்குள் பதுங்கி கொண்டான். அப்போது இருட்டாக இருந்ததால் போலீசாரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் போலீசார் காட்டுப்பகுதியில் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் போலீசார் முட்புதருக்குள் பதுங்கி இருந்த அவனை போலீசார் பிடித்தனர்.

பின்னர் பிடிபட்டவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவன் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகேசன் (22) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரியை திருடி கடத்திய வாலிபரை 3 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story