போலீசார் தாக்கியதாக வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி
பரமக்குடியில் போலீசார் தாக்கியாக வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பரமக்குடி,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்தவர் அழகு மகன் கண்ணன்(வயது 35). இவர் சவுதியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விவசாய வேலைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் கண்ணன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பரமக்குடி வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிச்சென்றுள்ளார். அப்போது எமனேசுவரம் அருகே ஜீவா நகர் பகுதியில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகநாதன் தலைமையிலான போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கண்ணன் செல்வதற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருவரை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த சப்–இன்ஸ்பெக்டர் முருகநாதன் விரட்டிச்சென்று வாகனத்துடன் கீழே தள்ளியதில் இருவரும் விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பின்னால் சென்ற கண்ணன் கீழே விழுந்து கிடந்த இருவரையும் தூக்கினாராம்.
பின்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகநாதனிடம் ஏன் இவர்களை இப்படி தள்ளி விட்டீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவரையும், கண்ணனையும் எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு கண்ணனை கைவிலங்கு மாட்டி போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் கண்ணனை மீட்க அவரது உறவினர்கள் எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவரை போலீசார் உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற கண்ணன் காவல்துறையினர் தாக்கியதில் வலி ஏற்பட்டதாக கூறி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கூறும்போது, கண்ணனும், அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுக்கு முன்னால் சென்றவர்கள் தலைக்கவசம் இல்லாமல் சென்றதால் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் நிற்காமல் சென்றதால் சப்–இன்ஸ்பெக்டர் முருகநாதன் விரட்டிச்சென்று அவர்களை பிடித்துள்ளார். அப்போது பின்னால் சென்ற கண்ணன் பொது இடத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் சப்–இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது. ஆனால் அவர் உண்மைக்கு புறம்பாக கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.