ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை காட்சிகள் உள்ளதா? மதுரையில் குறும்பட வெளியீட்டை தடுத்து நிறுத்திய போலீசார்


ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை காட்சிகள் உள்ளதா? மதுரையில் குறும்பட வெளியீட்டை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 25 Nov 2018 3:30 AM IST (Updated: 25 Nov 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி மதுரையில் குறும்பட வெளியீட்டை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை,

மதுரை பழைய நத்தம் ரோட்டில், குறும்பட தயாரிப்புக்கான தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு ‘ஜாக்குலின்‘ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்திற்கான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் இரவில் நடந்தது.

அதுபற்றி அறிந்ததும் மதுரை தல்லாகுளம் போலீசார் அங்கு வந்தனர். அந்த குறும்படத்தை திரையிடக்கூடாது என தடை விதித்தனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து, அந்த குறும்படம் திரையிட இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உருவானது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘ஜாக்குலின்‘ என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருக்கும் குறும்படத்தில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்கள் விரைந்து வந்து விசாரித்தோம். அந்த படத்தை நாங்கள் முழுமையாக பார்த்து அனுமதி அளிக்கும் பட்சத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு திரையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இதனால் படக்குழுவினர் எங்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் குறும்படத்தை உருவாக்கிய 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றனர்.

அதே நேரத்தில் குறும்படத்தை உருவாக்கிய குழுவினர் கூறும் போது, “குறும்படம் வெளியிட போலீசாரின் அனுமதி தேவையில்லை. போலீசார் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று சட்ட விதிகள் எதுவும் இல்லை. நாங்கள் இதை தெரிவித்தும் போலீசார் அந்த குறும்படம் தொடர்பான பென்டிரைவ், கதை ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்துவிட்டனர். இது அரசியல் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட குறும்படம்“ என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ‘ஜாக்குலின்‘ குறும்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் முழுமையாக வெளியாகி பரவி வருகிறது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story