நாகை முதல் வேளாங்கண்ணி வரை 87 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்


நாகை முதல் வேளாங்கண்ணி வரை 87 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 5:00 AM IST (Updated: 25 Nov 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

நாகை முதல் வேளாங்கண்ணி வரை 87 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை முதல் வேளாங்கண்ணி வரை 87 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்னும் 2 தினங்களில் மின்சாரம் வழங்கும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருவதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மின் பாதை சீரமைப்பு பணியில் 5 ஆயிரத்து 875 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் தார்ப்பாய்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலமாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 146 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின், நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குனர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story