கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து: வேடிக்கை பார்க்க வந்த 2 பேர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலி


கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து: வேடிக்கை பார்க்க வந்த 2 பேர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:45 AM IST (Updated: 26 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை, வேடிக்கை பார்க்க வந்த 2 பேர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சந்தை பகுதியை சேர்ந்தவர் செழியன் (வயது 45). இவர் அந்த பகுதியில் கயிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் கொல்கத்தாவை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

இங்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் நார் பிரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்த அந்தியூர், பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து தீ விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள சமையல் அறையில் இருந்த சிலிண்டர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அதன் ஒரு பகுதி, அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலையில் விழுந்தது. இதில் அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அத்தாணி காலனியை சேர்ந்த பெரியசாமி (55) என்பவரின் மீதும் சிலிண்டரின் வெடித்த பகுதி விழுந்தது. இதில் அவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் தொழிற்சாலை உரிமையாளர் செழியன், அத்தாணியை சேர்ந்த சாமியப்பன் (40) ஆகியோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார்.

சிலிண்டர் வெடித்து சிதறியதில் பலியான 50 வயதானவர் யார்? எனவும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story