சலவை தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், கலெக்டரிடம் மனு


சலவை தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:15 AM IST (Updated: 27 Nov 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

சலவை தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது மங்கலம் அக்ரஹாரபுத்தூரை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– எங்களது பகுதியில் உள்ள பாலத்தின் கிழ் குப்பைகளை கொட்டிவைத்துள்ளனர். மேலும், கழிவுநீர் கால்வாய் தண்ணீரும் அந்த இடத்தில் சேருகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

இதுபோல் பள்ளிவாசல், பள்ளிகூடம் அருகில் குப்பைகள் அதிகமாக உள்ளது. இதனை மாதம் மாதம் அப்புறப்படுத்த வேண்டும். எங்கள் பகுதியில் சாலைகள் குண்டும்–குழியுமாக உள்ளதால், இதனை சீரமைக்க வேண்டும். மேலும், பொது சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும். குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஊத்துக்குளி, குன்னத்தூர், வெள்ளிரவெளியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘ குன்னத்தூர் உள்வட்டம் காவுத்தம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட செம்பூத்தாம்பாளையம் ஊரில் தோட்டத்த உரிமையாளர்கள் அவர்களது நிலத்தில் அனுமதியின்றி முறைகேடாக சுமார் 30 ஆயிரம் லோடு மண்ணை வெட்டி இரவோடு இரவாக கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள். எனவே அரசு அனுமதியின்றி சுரங்கம் தோண்டி மண் விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றிருந்தனர்.

நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் கொடுத்த மனுவில் ‘‘ திருப்பூரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் பஸ் வசதி இல்லாமல் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் பாறைக்குழி அருகில் ரியல் எஸ்டேட் செய்து வரும் தனிநபர் சுயலாபத்திற்காகவும், தன்னிச்சையாக தான் மட்டும் வாழ வேண்டும் என்ற நோக்கிலும், திருப்பூர் மாவட்ட மக்களை சிரமப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அந்த இடத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே திருப்பூர் மாவட்ட கலெக்டர் நெருப்பெரிச்சல் கிராமத்தில் பதிவுத்துறை கட்டிடம் கட்டுவதை நிறுத்த வேண்டும்’’ என்றிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த மனுவில் ‘‘ திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்து வருகிறது. இது போலீசாருக்கு தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை. எனவே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட சலவை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ‘‘ சலவை தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மாவட்டந்தோறும் கூட்டுறவு சலவை நிலையம் அமைத்திட வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா பெற அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றிருந்தனர்.


Next Story