திருப்பூரில் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
திருப்பூரில் கள்ளக்காதலி, அவருடைய கணவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளாதேவி (34). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாதேவிக்கும் அனுப்பர்பாளையம் கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த தொழிலாளியான சுரேஷ்குமார் (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனால் கணேசனுக்கும் மஞ்சுளாதேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசன் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் மஞ்சுளாதேவியை அழைத்து கணவருடன் சென்று சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் மஞ்சுளாதேவி சுரேஷ்குமாருடனான பழைய தொடர்பு குறித்து ஒரு சிலரிடம் கூறியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த சுரேஷ்குமாரின் மனைவிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முன்பு பழகியதை இப்போது மஞ்சுளாதேவி வெளியே கூறி தன் மானத்தை வாங்குகிறாளே என்று சுரேஷ்குமார், மஞ்சுளாதேவி மீது கடும் ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுளாதேவி அவருடைய கணவருடன் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் மஞ்சுளாதேவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளால் மஞ்சுளாதேவியின் கழுத்தில் வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அதை தடுக்க முயன்றார். ஆனால் ஆத்திரம் அடங்காத சுரேஷ்குமார் கணேசனையும் அரிவாளால் வெட்டினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மஞ்சுளாதேவி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.