பவானி அருகே பெண்ணை கட்டிப்போட்டு 11 பவுன் நகை –ரூ.70 ஆயிரம் கொள்ளை
பவானி அருகே முகமூடி அணிந்து வந்தவர்கள் பெண்ணை கட்டிப்போட்டு 11 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார்கள்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள திப்பிசெட்டிபாளையம் அலங்கார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (32). அவருடைய மனைவி கவிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரானிக் தையல் எந்திர மெக்கானிக்காக இருக்கும் சுரேஷ் நேற்று முன்தினம் தொழில் விஷயமாக சென்னைக்கு சென்றுவிட்டார். வழக்கம்போல் இரவு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு கவிதாவும், குழந்தைகளும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் சுரேஷ் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார்கள்.
பின்னர் முன்பக்க கதவை ஒட்டியுள்ள ஜன்னலின் இரும்பு கம்பியை அறுத்து கதவின் தாழ்ப்பாளை திறக்க முயன்றுள்ளார்கள். ஆனால் முடியவில்லை. அதனால் இரும்பு ராடை வைத்து தாழ்ப்பாளை நெம்பி உடைத்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.
உள்ளே சென்ற கொள்ளையர்களில் ஒருவன் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த கவிதாவை எழுப்பியுள்ளான். திடுக்கிட்டு எழுந்த அவர் கொள்ளையர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அதில் ஒருவன் கவிதாவின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘ஒழுங்காக கழுத்தில் போட்டிருக்கும் நகையையும், பீரோவில் உள்ள நகையையும், பணத்தையும் எடுத்துக்கொடு. இல்லை என்றால் கொன்றுவிடுவேன்‘ என்று மிரட்டியுள்ளான்.
பிறகு அவனே கவிதாவின் தாலிக்கொடியை பறித்துக்கொண்டான். மற்றொருவன் பீரோவை உடைத்து உள்ளே இருந்த நெக்லஸ், தங்க சங்கிலி, வெள்ளி பொருட்கள், 70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டான்.
அதன்பின்னர் கவிதாவின் கழுத்தில் கத்தி வைத்திருந்தவன் துணியால் அவரை கட்டிப்போட்டான். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.
கொள்ளையடிக்கப்பட்டது 11 பவுன் நகை என்றும், வெள்ளிப்பொருட்கள் ½ கிலோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், கட்டுகளை தானே அவிழ்த்துக்கொண்ட கவிதா இதுபற்றி தன் கணவர் சுரேசுக்கு உடனே தகவல் கொடுத்தார். அவர் உடனே வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். இதுபற்றி பவானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சென்று பார்த்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி அருகே பெண்ணை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அச்சப்பட வைத்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.