குமரி நர்சு சாவில் திடீர் திருப்பம்: காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
குமரி நர்சு சாவு தொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொன்றது அம்பலமாகி உள்ளது.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளையை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). இவர் தேங்காப்பட்டணத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 20–ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (21–ந் தேதி) காலையில் ஸ்ரீஜா குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்தார். களியக்காவிளை போலீசார் ஸ்ரீஜா உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால், ஸ்ரீஜா கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஸ்ரீஜா சாவு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
ஸ்ரீஜா வேலை பார்த்து வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், மற்றும் அவரின் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்ரீஜா வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ஸ்ரீஜா செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அந்த எண் களியக்காவிளை பகுதியில் சிக்னல் காட்டியது. அந்த எண்ணை வைத்திருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் எஸ்.டி. மங்காடு, கோழிபொற்றவிளையை சேர்ந்த தேவராஜ் மகன் விபின் (26) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஸ்ரீஜாவை கொலை செய்ததை விபின் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் விபின் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
நான் நித்திரவிளை– களியக்காவிளை வழித்தடத்தில் சொந்தமாக வேன் வைத்து, ஓட்டி வருகிறேன். எனது வேனில் ஸ்ரீஜா வேலைக்கு செல்வது வழக்கம். இதனால், எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். பகல் நேரத்தில் எனது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இதை பயன்படுத்தி ஸ்ரீஜாவை எனது வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழிக்க முயன்றேன். அவர் சம்மதிக்காததால் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்தேன். இதுபோல், பல நாட்கள் நைசாக பேசி ஆசைக்கு இணங்க வைத்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.
இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தார். நானும் திருமணம் செய்ய சம்மதிப்பதாக கூறினேன். அதன்படி, கடந்த 20–ந் தேதி இரவு திருமணத்துக்கு தாலி வாங்க செல்வோம் எனக்கூறி மோட்டார் சைக்கிளில் குழித்துறைக்கு அழைத்து வந்தேன்.
அங்கு குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் மேல் பகுதியில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, தாலி வாங்க என்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறினேன். உடனே, ஸ்ரீஜா தான் அணிந்திருந்த வளையல், மோதிரம், கொலுசு என 5 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். அத்துடன் அவரது செல்போனையும் நான் வாங்கி கொண்டேன். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென ஸ்ரீஜாவை பாலத்தின் மேலிருந்து கீழே தள்ளினேன். இதில் அவர் ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். பின்னர், எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று எனது வழக்கமான வேலைகளை கவனிக்க தொடங்கினேன். ஆனால், போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் விபினை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.