சாலைக்கிராமம் பகுதியில் சவடு மண் அள்ளுவதை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் மனு


சாலைக்கிராமம் பகுதியில் சவடு மண் அள்ளுவதை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:10 AM IST (Updated: 27 Nov 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களில் சவடு மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி மனு கொடுத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்டகலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– இளையான்குடி வட்டத்துக்குட்பட்ட சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களில் சவடு மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதி மூலம் சவடு மண் அள்ளுவதற்கு உரிமம் பெற்றவர்கள் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக அள்ளி வருகின்றனர். ஏற்கனவே அந்த பகுதியில் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு கூட அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு விதிமுறையை மீறி நடைபெற்று வரும் சவடு மண் திருட்டு காரணமாக விவசாயம் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும் அதிக அளவில் பாதிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு அரசு விதிமுறைக்கு புறம்பாக சாலைக்கிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களில் சவடு மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story