வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடம் ரூ.4½ கோடி மோசடி செய்த போலி சாமியார் கைது
வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடம் ரூ.4½ கோடி மோசடி செய்த சிவகங்கை போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60). இவர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தியானம், சித்தர்கள் வழிபாடு என்று சென்று வருவாராம். இதை தெரிந்து கொண்ட குவைத்தில் வேலை செய்யும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவர் ராமதாசிடம் சிவகங்கையில் ஒரு சித்தர் இருப்பதாகவும், அவர் தரும் மருந்தில் பல நோய்கள் குணமாகிறது என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராமதாஸ் கடந்த 2015–ம் ஆண்டு சிவகங்கைக்கு வந்துள்ளார். அவரிடம் சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த ரவி (46) என்பவரை சாமியார் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து சிவகங்கையில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று கூறி ராமதாசிடம் பல தவணைகளில் ரூ.4 கோடியே 66 லட்சம் வாங்கினாராம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரமம் மற்றும் பணம் குறித்து ராமதாஸ் கேட்ட போது, சாமியார் ரவி சரிவர பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமதாஸ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.
அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்– இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, அருள்மொழிவர்மன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி, தவமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் ரவி போலி சாமியார் என்பதும் இதுபோல் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.40லட்சம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது
அதைத்தொடர்ந்து போலி சாமியார் ரவி, அவரின் மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அப்துல்அஜீஸ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையை சேர்ந்த தேவர் என்ற பொன்னியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் போலி சாமியார் ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.