தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது: நகைகளை உருக்கி விற்ற கொள்ளையர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்
திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிய நகைகளை உருக்கி விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. பாலகிருஷ்ணாபுரத்தில் ஒருவருடைய வீட்டில் 70 பவுன் நகை, ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. சீலப்பாடியில் ஒருவருடைய வீட்டில் நகை உள்ளிட்டவை திருடு போனது. இதேபோல், நல்லமநாயக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக திருடிய நகைகளை, அவர்கள் உருக்கி விற்பனை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசில் சிக்கக்கூடாது என்பதற்காகவும், யாருக்கும் சந்ததேகம் வரக்கூடாது என்பதற்காகவும் தாங்கள் திருடிய நகைகளை உடனே விற்பது இல்லை.
சில நாட்கள் தங்கள் வீட்டிலேயே நகைகளை மறைத்து வைப்பார்கள். அதுவும் சுவரில் உள்ள ‘சுவிட்ச் போர்டு’களை கழற்றி அதன் உள்ளே நகைகளை மறைத்து வைத்துள்ளனர். தேவைப்படும்போது, அந்த நகைகளை எடுத்து உருக்கி தங்கமாக விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தை வைத்து ஒன்றாக சேர்ந்து ஊர் ஊராக சுற்றியுள்ளனர். அவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம். அவர் களை பிடித்தால் மேலும் நகைகள் மீட்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story