போலீசார் தாக்கியதாக புகார்: காலாப்பட்டு சிறையில் தொழிலாளி மர்ம சாவு
திருட்டு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர்–புதுநகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி குமாரி. இவர்களது மகன் ஜெயமூர்த்தி(21). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களும் அதே பகுதியில் வசித்து வந்தனர்.
கடந்த 21–ந்தேதி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு ஒன்றில் ஜெயமூர்த்தியை பாகூர் போலீசார் கைது செய்தனர். மறுநாள் (22–ந் தேதி) கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு ஜெயமூர்த்திக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி நேற்று மாலை உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெயமூர்த்தியின் உறவினர்கள், கரிக்கன்நகர் பகுதி மக்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயமூர்த்திக்கு சிகிச்சை அளித்த வார்டின் முன்பு கூடினர். அங்கு அவர்கள் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஜெயமூர்த்தி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். ஜெயமூர்த்தி பாகூர் போலீசார் தாக்கியதால் தான் இறந்து விட்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனைதொடர்ந்து தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து ஜெயமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. அப்போது அவரது உடலை மூடி வைத்திருந்தனர். அப்போது அவரது உறவினர்கள் ஜெயமூர்த்தியின் முகத்தை காட்ட வேண்டும் என்று கூறி ஸ்டிரச்சரை தடுத்தனர். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக அவர்களை அப்புறப்படுத்தி விட்டு ஜெயமூர்த்தியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.
இதன்பின் அவர்கள் அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வாயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்து விட்டார். எனவே பாகூர் போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர்கள் சாலையில் புரண்டு கதறி அழுதனர். போலீசாரையும் கண்டித்தனர்.
அவர்களிடம், போலீசார் புகார் கொடுங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக இங்கு பணியில் இருக்கும் போலீசாரை திட்டக்கூடாது என்று எச்சரித்தனர். அப்போது அங்கிருந்த சிலர் அந்த பெண்களை சமாதானம் செய்தனர்.
இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜெயமூர்த்தி இறந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு எழுதிக்கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட பெரியகடை போலீசார் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பின் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஜெயமூர்த்தியின் உறவினர்கள் கூறும்போது, ‘சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற பாகூர் போலீசார் பல மணி நேரம் போலீஸ் நிலையத்தில் வைத்து ஜெயமூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். அவரை பிடித்துச் சென்றது குறித்து அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மறுநாள் ஜெயமூர்த்தியை பார்க்க சென்ற அவரது மனைவியையும் சிறையில் பார்க்க விடவில்லை. போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்துள்ளார். எனவே பாகூர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தநிலையில் ஜெயமூர்த்தி மர்மமான முறையில் இறந்த தகவல் காலாப்பட்டு சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கு தெரியவந்தது. போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் தாக்கியதால் தான் அவர் மரணம் அடைந்தார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிறையில் இருந்த கைதிகள் நேற்று இரவு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த உடன் போலீசார் அங்கு சென்று ஈடுபட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். ஜெயமூர்த்தி மர்ம சாவு விவகாரத்தால் காலாப்பட்டு சிறையிலும் பரபரப்பு ஏற்பட்டது.