தேர்தலை கண்டு அ.தி.மு.க., தி.மு.க. அஞ்சுகின்றன - பிரேமலதா விஜயகாந்த்


தேர்தலை கண்டு அ.தி.மு.க., தி.மு.க. அஞ்சுகின்றன - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:00 PM GMT (Updated: 27 Nov 2018 10:02 PM GMT)

தேர்தலை கண்டு அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அஞ்சுகின்றன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது கூறியதாவது:-

கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும். மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சேதங்கள் அதிகம் என கூறியுள்ளது. ஆனால் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தான் மக்களை பார்க்கவில்லை. எதிர்கட்சி தலைவரும் மக்களை சந்திக்காமல் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்த்து விட்டு சென்று விட்டார். ஏற்கனவே மழையை பயன்படுத்தி இடைத்தேர்தலை ரத்து செய்தனர். தற்போது புயலை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்த விடமாட்டார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க.வும் இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறது. திருவாரூரில் தி.மு.க. ஜெயிப்பதே கடினமாக இருக்கும். ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தல் வந்தால் இடைத்தேர்தல் வரலாம். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடைத்தேர்தலை நடத்த விடமாட்டார்கள். கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் தே.மு.தி.க. முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் சுதிஷ், மாவட்ட செயலாளர் ராமசாமி, செல்வின்ராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story