மணவாளக்குறிச்சி அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து ரூ.5 லட்சம் சேதம்


மணவாளக்குறிச்சி அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து ரூ.5 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:37 AM IST (Updated: 28 Nov 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே ஆசாரிதெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 56). இவர் அந்த பகுதியில் மர பீரோ, மேஜை, நாற்காலி செய்து விற்பனை செய்யும் மரப்பட்டறை மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலையில் ராஜனின் கடையில் உள்ளிருந்து புகை வருவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜனுக்கும், குளச்சல் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள், கடையில் இருந்த மேஜை, நாற்காலி, பீரோ போன்ற பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ராஜன் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதிவேலை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story