தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் குட்டியுடன் நின்ற யானைகள்


தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் குட்டியுடன் நின்ற யானைகள்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:47 AM IST (Updated: 28 Nov 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

தலமலை வனப்பகுதியில் நடுரோட்டில் குட்டியுடன் யானைகள் வந்து நின்றன.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்தநிலையில் தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் பெஜலட்டி அருகே, நேற்று காலை 10 மணி அளவில் நடுரோட்டில் குட்டியுடன் 3 யானைகள் வந்து நின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே நின்றுகொண்டார்கள். மேலும் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தார்கள். சுமார் 10 நிமிடம் யானைகள் அங்கும், இங்கும் செல்லாமல் அப்படியே நின்றன.

அதன்பின்னர் மெதுவாக காட்டுக்குள் சென்றன. அதைத்தொடர்ந்து இருபக்கமும் நின்றுகொண்டு இருந்த வாகனங்கள் சென்றன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பசுந்தீவனங்களை தேடி யானைகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தை தவிர்த்து மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

செல்பி எடுப்பதற்காக எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த கூடாது‘ என்று எச்சரித்தனர்.


Next Story