கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு


கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:45 AM IST (Updated: 28 Nov 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னியக்கவுண்டன்பாளையத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த சித்ரா(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அதுபோல் சித்ராவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் சரவணனுக்கும், சித்ராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு ஒரு வருடமாக சின்னியக்கவுண்டன்பாளையத்தில் ஒரே வீட்டில் கணவன்–மனைவி போல் வசித்து வந்தனர். அதன்பிறகு சரவணனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சித்ரா, அவரை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த 31–5–2017 அன்று இரவு வீட்டில் 2 பேரும் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த சரவணன், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து சித்ரா மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் கருகிய நிலையில் சித்ரா கதறி துடித்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். இந்தநிலையில் மறுநாள் சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்ததுடன், சித்ரா ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணை எரித்துக்கொலை செய்த குற்றத்துக்கு சரவணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் ரூபன் ஆஜராகி வாதாடினார்.


Next Story