பாதுகாப்பு, மறுவாழ்வை அமல்படுத்தும் வகையில் ஆள்கடத்தல் தடுப்பு மசோதாவை சட்டமாக்க வேண்டும், மத்திய அரசுக்கு கோரிக்கை


பாதுகாப்பு, மறுவாழ்வை அமல்படுத்தும் வகையில் ஆள்கடத்தல் தடுப்பு மசோதாவை சட்டமாக்க வேண்டும், மத்திய அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2018 11:12 PM GMT (Updated: 27 Nov 2018 11:12 PM GMT)

பாலியல் சுரண்டல், கொத்தடிமை முறை ஆகியவற்றிற்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு வழங்கும் வகையிலும் ஆள்கடத்தல் தடுப்பு மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்று கொத்தடிமைக்கு எதிரான பிரசார இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

விருதுநகர்,

பிரசார இயக்கத்தின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடு முழுவதும் பெண் குழந்தைகள் பாலியல் சுரண்டல், கொத்தடிமை கொடுமைகளுக்காக கடத்தப்படும் நிலை உள்ளது. இக்கொடுமையை தடுக்க முறையான சட்டம் இல்லை. இதற்கென தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ள நிலையில் இதில் 55 ஆயிரம் குழந்தைகள் தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலை உள்ளது என மத்திய அரசின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் செயல்பட்டு வந்தாலும், பிற மாநிலங்களுக்கு பெண் குழந்தைகள் கடத்தப்படும் போது அந்த மாநில போலீசாருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் கடத்தப்படும் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே ஆள்கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நாடு முழுவதுமான சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம். மேலும் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆள் கடத்தல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரை மீட்டு அந்தந்த நாடுகளுக்கு முறையாக அனுப்புவதற்கும் இயலாத சூழல் நீடிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் ஒரே மாதிரியான சட்ட வழிவகைகள் இல்லை. எனவே இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மத்திய அரசு ஒரே மாதிரியான சட்டம் இயற்ற வேண்டியது தேவையாகிறது. இந்தநிலையில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஆள்கடத்தல் தடுப்பு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதா பாராளுமன்ற மேலவையில் இக்குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது. அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் இதனை சட்டமாக்க முடியும். பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் சிலர் இந்த மசோதா தேவையில்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. எனவே மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க வலியுறுத்தும் வகையில் எங்கள் அமைப்பின் சார்பில் பிரசார இயக்கம் நடத்தி வருகிறோம். இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இருந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகள் பெறப்பட்டு முதல்–அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் நாடு முழுவதும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், ஏற்கனவே பாதிப்பு அடைந்த பெண் குழந்தைகளை மீட்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story