பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல்
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை,
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலாதேவியை அருப்புக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் கமிட்டி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. முக்கிய பிரமுகர்களை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர். நிர்மலாதேவி வழக்கை வேறொரு அமைப்பு விசாரித்தால் தான் உண்மை வெளிப்படும்.
எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.