குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக ரூ.15¾ லட்சம் மோசடி; செய்த பெண் உள்பட 2 பேர் கைது
குறைந்த விலையில் தங்க நாணயம் தருவதாக கூறி ரூ.15¾ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகரை சேர்ந்தவர் மீனாட்சி(வயது 30). ஆரப்பாளையம் பகுதியில் ஜவுளி நிறுவனம் வைத்துள்ளார். இவரிடம் சேலை வாங்குவது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த குருநாதன்(49), ஜெயலட்சுமி(40) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையின் ஏஜெண்டாக செயல்படுவதாகவும், அந்த கடையில் பணம் கட்டினால் மார்க்கெட் விலையில் தங்க நாணயமாக கிராம் ஒன்றுக்கு ரூ.400க்கு குறைத்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மீனாட்சி அவர்களிடம் முதலில் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். அதற்கு அவர்கள் 8 கிராம் தங்க நாணயத்தை கொடுத்தனர். அதை தொடர்ந்து அவர் கொடுத்த ரூ.50 ஆயிரத்திற்கு தங்க நாணயம் கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு மீனாட்சி வாடிக்கையாளர் பலரிடம் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி கொடுத்தார்.
ஆனால் பணத்தை வாங்கி கொண்ட குருநாதன் மற்றும் ஜெயலட்சுமி கூறியபடி தங்க நாணயத்தை கொடுக்கவில்லை. எனவே மீனாட்சி தான் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். எனவே தனது பணத்தை மோசடி செய்தாக மீனாட்சி எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் குருநாதனும், ஜெயலட்சுமியும் இதேபோன்று பல்வேறு ஊர்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் உசிலம்பட்டியில் மறைந்திருந்த குருநாதன், ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.