‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 3:15 AM IST (Updated: 28 Nov 2018 7:18 PM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டன.

கோவில்பட்டி, 

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டன.

கோவில்பட்டி 

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டியில் மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ. சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, போர்வை, சேலை, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேலிடுபட்டி கிராமத்துக்கு கொண்டு சென்று, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஏரல்–கயத்தாறு 

இதேபோன்று ஏரல் புதுமனை அம்மாள்தோப்பு நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை லோடு ஆட்டோவில் ஏற்றி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி கிராம மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் யூனியன் ஆணையாளர் முத்துகுமார் தலைமையில், ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை லாரியில் ஏற்றி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டு சென்று, அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

கயத்தாறு மருத்துவ சமுதாயம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்து, அவற்றை மினி லாரியில் ஏற்றி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்கினர்.

ஸ்ரீவைகுண்டம்–சாத்தான்குளம் 

ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுந்தரவேல் தலைமையில், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றி சென்று, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி சார்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்து, விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜ்குமாரிடம் வழங்கினர். பின்னர் அவற்றை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று, வினியோகம் செய்தனர்.

சாத்தான்குளத்தில் அனைத்து மக்கள் நல அமைப்புகள் சார்பில், ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்தனர். பின்னர் அவற்றை லாரியில் ஏற்றி சென்று, நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் காதர் முகைதீன் தலைமை தாங்கி நிவாரண பொருட்கள் மற்றும் களப்பணியாளர்கள் குழுவையும் அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் சேக்முகைதீன் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story