புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்: சாலையில் படுத்து கிராம மக்கள் போராட்டம்


புயல் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்: சாலையில் படுத்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே புயல் நிவாரண பொருட்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டியதை கண்டித்து கிராம மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் பகுதிக்கு மின்வினியோகம் வழங்காததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் உடனடியாக கைவிடப்பட்டது. இவர்கள் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் கூத்தூர் ஊராட்சி பெரிய தெரு, நடுத்தெரு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் நிவாரண பொருட்களை வழங்குவதில் ஆளும் கட்சியினர் பாரபட்சம் காட்டுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள் சாலையில் படுத்தும், நிவாரண பொருட்களை சாலையில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் மண்டல புயல் நிவாரண அதிகாரி பேபி, வட்டார வளர்ச்சி அதிகாரி அருள்மொழி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் கிராம மக்கள் நிவாரண பொருட்கள் முன்பு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கிராம மக்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக நாகை-திருவாரூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story