கோவை குனியமுத்தூரில்: நீரோடை பகுதியில் இருந்த 172 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு


கோவை குனியமுத்தூரில்: நீரோடை பகுதியில் இருந்த 172 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

கோவை குனியமுத்தூரில் நீரோடை பகுதியில் கட்டப்பட்டு இருந்த 172 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

போத்தனூர்,

கோவை குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாய் அருகே, குறிச்சி குளத்தின் தெற்கு பகுதியில் உபரி நீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக ஓடை கட்டப்பட்டது. இந்த ஓடையில் நீர் வழிந்து நொய்யல் ஆற்றில் கலந்துவிடும். நீரோடையை ஆக்கிரமித்து காயிதேமில்லத் காலனி, பெரியசாமி வீதி பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறிய வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.

மழைக்காலங்களில் நீரோடையில் தண்ணீர் செல்லும்போது வீடுகளை வெள்ளம் சூழ்ந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாதிப்பு இருந்தது. இந்த வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறையினரும், குடிசைமாற்று வாரியத்தினரும் நோட்டீஸ் வினியோகித்தும் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நீரோடை ஆக்கிரமிப்பு பகுதிகளான காயிதேமில்லத் காலனியில் உள்ள 151 வீடுகள், பெரியசாமி வீதி பகுதியில் உள்ள 21 வீடுகள் உள்பட மொத்தம் 172 வீடுகளில் வசித்தவர்களுக்கு கோவைப்புதூர் அறிவொளி நகர் குடிசைமாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

எனவே நீரோடை பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

இதனால் பெரும்பாலான வீடுகள் காலியாக இருந்தது. அங்கு இரவு நேரங்களில் மது அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

எனவே காலி செய்யப்பட்ட 172 வீடுகளை இடிக்க குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று குடிசை மாற்று வாரிய இளநிலை என்ஜினீயர் ரமேஷ், திட்ட என்ஜினீயர் சரவணன் ஆகியோர் தலைமையில் பொக்லைன் மூலம் வீடுகள் இடித்து அகற்றப் பட்டன.

Next Story