அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோட்டில் 9 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி; பெண் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோட்டில் 9 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், கல்லூரி பேராசிரியரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (வயது 30). இவர் அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த ஜெகதீசனின் மனைவி ரேவதி என்கிற தமிழரசி (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தமிழரசி ஈரோடு மாவட்ட சர்வேயராக இருப்பதாகவும், அரசு துறையில் இருப்பதால் வேலை வாங்கி தருவதாகவும் உமாமகேஸ்வரியிடம் கூறி உள்ளார். மேலும், அவரிடம் இருந்து அரசு வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று உள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் உமாமகேஸ்வரி பணத்தை திருப்பி கேட்டு உள்ளார்.
தமிழரசி அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து உமாமகேஸ்வரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தமிழரசி, சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் நெடுஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து உமாமகேஸ்வரி உள்பட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 9 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் ரூ.39 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழரசியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் நெடுஞ்செழியனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.