திருப்பூர் அருகே ரூ.1 கோடி கேட்டு கோவை ரியல் எஸ்டேட் அதிபர், நண்பர் கடத்தி சிறை வைப்பு; வாலிபர் கைது


திருப்பூர் அருகே ரூ.1 கோடி கேட்டு கோவை ரியல் எஸ்டேட் அதிபர், நண்பர் கடத்தி சிறை வைப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2018 4:45 AM IST (Updated: 29 Nov 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே ரூ.1 கோடி கேட்டு கோவை ரியல் எஸ்டேட் அதிபர், நண்பரை கடத்தி கும்பல் சிறை வைத்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

கோவை வரதராஜபுரத்தை அடுத்த எம்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 66). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடன் தொழில் ரீதியாக கோவையை சேர்ந்த டென்னிஸ் என்பவர் பழகி வந்துள்ளார். இதையடுத்து டென்னிஸ், நந்தகோபாலிடம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதற்கு நந்தகோபாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 26–ந்தேதி நந்தகோபாலிடம் சென்ற டென்னிஸ், திருப்பூரில் உள்ள தனது நண்பர்களையும் சீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து டென்னிஸ் நந்தகோபாலின் காரிலேயே அவரையும், அவருடைய நண்பர் ராமமூர்த்தியையும் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிக்கு அழைத்து வந்தார்.

இதற்கிடையே டென்னிஸின் நண்பர்களான செல்வா, கார்த்தி, ரகு ஆகியோர் கணியாம்பூண்டியில் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு பிடித்து இருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் இருந்தனர். இந்த நிலையில் காருடன் அங்கு வந்த டென்னிஸ், நந்தகோபாலையும், ராமமூர்த்தியும் தனது நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று கூறி நைசாக அவரை அழைத்து சென்று உள்ளார். வீட்டுக்குள் சென்ற உடன் டென்னிஸ், அங்கிருந்த அவருடைய நண்பர்களான செல்வா, கார்த்தி, ரகு ஆகியோருடன் சேர்ந்து நந்தகோபால் மற்றும் ராமமூர்த்தி இருவரது கைகளையும் கட்டி போட்டு சிறை வைத்தார்.

பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட சீட்டு நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.1 கோடி எடுத்து வர சொல்லுமாறும், இல்லையென்றால் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையே கணியாம்பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் விரைந்து சென்றனர். போலீசார் வந்ததை அறிந்ததும் அங்கிருந்து டென்னிஸ், செல்வா, கார்த்தி ஆகிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரகுவை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் கடத்தப்பட்ட நந்தகோபால், ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய நந்தகோபாலின் கார் மீட்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கார்த்தி என்பவருடைய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் பிடியில் சிக்கிய ரகுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை பீளமேட்டில் உள்ள சீட்டு நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.1 கோடி பறிப்பதற்காகவே நந்தகோபால், ராமமூர்த்தியை டென்னிஸ் திட்டமிட்டு திருப்பூருக்கு காரில் கடத்தி வந்ததும், இங்குள்ள வீட்டில் சிறை வைத்ததும் தெரிய வந்தது.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுவை(29) கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கோவையை சேர்ந்தவர்களான டென்னிஸ், செல்வா, திருப்பூரை சேர்ந்த கார்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story