உசிலம்பட்டியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் பெண்கள் உள்பட 3 பேர் பலி


உசிலம்பட்டியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2018 3:47 AM IST (Updated: 29 Nov 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உசிலம்பட்டி,

செக்கானூரணி பகுதியை சேர்ந்தவர் ஜாய்(48). தனியார் பள்ளி முதல்வரான இவர் நேற்று உசிலம்பட்டியில் இருந்து காரில் செக்கானூரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த்(34) என்பவர் ஓட்டிச் சென்றார். இதேபோல் உசிலம்பட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் தர்மர்(62), தனது மனைவி சுகி அமுதாவுடன்(60) மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி அருகில் 2 கார்களும் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் கார்களில் வந்த ஜாய், ஆனந்த், தர்மர் மற்றும் சுகி அமுதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகி அமுதா இறந்துபோனார். ஜாய், ஆனந்த், தர்மர் ஆகியோர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் மனைவி லட்சுமி(வயது 61). இவர் நேற்று கருமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் லட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). இவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராமசாமி நேற்று வேலை தொடர்பாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி வேன் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story