ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பலரிடம் ரூ.1 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் அம்சுகொடி. இவர் உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவரால் எந்திரத்தில் பணம் எடுக்கமுடியவில்லை. அப்போது அங்கு நின்றிருந்த விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தை சேர்ந்த சீனிவாசன்(51) என்பவர் அம்சுக்கொடியிடம் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார்.இதனையடுத்து அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கிய சீனிவாசன் பணம் எடுத்து கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அம்சுக்கொடி முதலில் பணத்தை தனது பாக்கட்டியில் வைத்துள்ளார். அந்த நேரத்தில் அம்சுக்கொடி கொடுத்த ஏ.டி.எம். கார்டை சீனிவாசன் தன்னிடம் வைத்துக்கொண்டு ஏற்கனவே அவரிடம் இருந்த போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். பின்னர் அம்சுக்கொடி அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஏ.டி.எம். மையத்திற்கு திரும்பி சென்று பார்த்தபோது சீனிவாசன், அம்சுகொடியின் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சீனிவாசனை பிடித்து உசிலம்பட்டி டவுன் போலீஸ் நிலையத்தில் அம்சுகொடி ஒப்படைத்தார்.
போலீசார் சீனிவாசனை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் இதுபோன்று பலரிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பின்னர் தனது போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி பணம் எடுத்தது தெரியவந்தது. இவ்வாறு பலரிடம் ரூ.1 லட்சம் வரை அவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனிடம் இருந்த ரூ.1 லட்சத்து 7 ஆயிரம், 13 போலி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.