வாலிபர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
வாலிபர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்த இருதரப்பினர் இடையே 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் சூனாம்பேடு அடுத்த கயநல்லூர் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்த வசந்தராஜா (28) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சூனாம்பேடு போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர். அதில் சூனாம்பேடு அடுத்த ஆலத்தூரை சேர்ந்த செந்தில் (37) இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியை தேடிவந்த நிலையில் சென்னை ஓட்டேரியில் பதுங்கி இருந்த செந்திலை சூனாம்பேடு போலீசார் தற்போது கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்திலை கைது செய்த போலீசாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி வெகுவாக பாராட்டினார்.