நஷ்டஈடு தொகைக்கான வட்டி வழங்காததால் தமிழக அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு தொகைக்கான வட்டி வழங்காததால் தமிழக அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 29 Nov 2018 5:05 AM IST (Updated: 29 Nov 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

நஷ்டஈடு தொகைக்கான வட்டி வழங்காததால் தமிழக அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை திரு.வி.க.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேடை அலங்காரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது46). இவர் தனது மகள் விஜயகுமாரியுடன் கடந்த 22.6.2009–ம் ஆண்டு ஜூலை மாதம் கவுண்டம்பாளையத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார்.

புதுவை 100 அடி சாலையில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் வந்த தமிழக அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் கடந்த 4.10.2012 அன்று புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அப்போது காயமடைந்த ராஜேஸ்வரிக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அதனை 45 நாட்களுக்குள் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். 45 நாட்களை தாண்டினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் 45 நாட்களுக்குள் நஷ்ட ஈடு தொகையை வழங்காமல் கடந்த 2013–ம் ஆண்டு வழங்கியது. அப்போது ரூ.1லட்சத்து 4 ஆயிரத்துடன் 7.5 சதவீதம் வட்டியை மட்டும் வழங்கியது. மீதம் உள்ள 1.5 சதவீதம் வட்டிக்கான தொகை ரூ.48 ஆயிரத்தை வழங்கவில்லை.

இதனை எதிர்த்து ராஜேஸ்வரி புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ரோகினி விசாரித்து வட்டித்தொகை ரூ.48 ஆயிரம் செலுத்தாத தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட பஸ்சை ஜப்தி செய்யும் படி கடந்த 2.11.2018ல் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து புதுவை புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த விழுப்புரம் கோட்ட பஸ் ஒன்றை கோர்ட்டு அமினா நேற்று காலை ஜப்தி செய்தார். தற்போது அந்த பஸ் புதுவை கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story