காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் மர்ம சாவு: நீதிபதி முன்னிலையில் தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு
காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததையொட்டி அவரது உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. வீடியோவில் இது பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி குமாரி. இவர்களது மகன் ஜெயமூர்த்தி(21). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களும் அதே பகுதியில் வசித்து வந்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஜெயமூர்த்தி பாகூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் மறுநாளே உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெயமூர்த்தியின் உறவினர்கள், கரிக்கன்நகர் பகுதி மக்கள் திரண்டு வந்து புதுவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் தாக்கியதால் தான் ஜெயமூர்த்தி இறந்து போனார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெயமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதை ஏற்க ஜெயமூர்த்தியின் உறவினர்கள் மறுத்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதி, வருவாய் அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து நீதிபதி சரண்யா புதுவை அரசு மருத்துவமனைக்கு சென்று ஜெயமூர்த்தியின் உடலை பார்வையிட்டார். பின்னர் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து ஜெயமூர்த்தியின் உடன் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் ஜெயமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவங்களால் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் பரபரப்பு ஏற்பட்டது.