வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வலியுறுத்துவோம் சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் பேட்டி


வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வலியுறுத்துவோம் சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 6:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசுக்கு வலியுறுத்துவோம் என்று சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார்.

வேலூர், 

தமிழக சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிக்குழுவின் தலைவராக ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை உள்ளார். இதுதவிர குழுவினர் உறுப்பினர்களாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 11 பேர் உள்ளனர். இந்த குழுவினர் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அரசு சார்பில் அளிக்கும் உறுதிமொழிகள், வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படுகிறதா? என ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று களஆய்வு மேற்கொள்வார்கள். பின்னர் அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் அளிப்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா? என சட்டமன்ற உறுதிமொழிக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். குழுத்தலைவர் இன்பதுரை தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, நந்தகுமார், மனோரஞ்சிதம், ராமஜெயலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலில் காட்பாடி மின்வாரிய காலனியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

கட்டுமான பணிகள் குறித்தும், திட்டம் நிறைவு பெறுவது குறித்தும், இத்திட்டத்தால் பயன்பெறும் பகுதிகள் குறித்தும் அதிகாரிகளிடம், உறுதிமொழிக்குழுவினர் கேட்டறிந்தனர். இத்திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்க மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சரிசெய்யும்படி குழுவினர் உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி 1–வது மண்டலத்தில் காட்பாடி காந்திநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்தனர். அங்கு குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுவதையும், மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுவதையும் பார்வையிட்டனர்.

பின்னர் குழுவின் தலைவர் இன்பதுரை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

இக்குழு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும். ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு, அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் ஆய்வுக்காக வந்த வழியிலோ, சாலைகளிலோ குப்பைகள் எதுவும் காணப்படவில்லை. அதேபோன்று குப்பை தொட்டிகளும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல், காற்று மாசுப்பாடு தடுக்கப்படுகிறது. குப்பைகள் உரமாக்கப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை இக்குழுவின் சார்பாக பாராட்டுகிறோம்.

இத்திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தமிழகத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது. வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சியில் செயல்படுத்த வலியுறுத்துவோம். இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.

இந்த ஆய்வறிக்கை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக அளிக்கப்படும். சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதி சரியாக நடைபெறவில்லை என்றால், அதுகுறித்து அதிகாரிகளை அழைத்து கேட்போம். அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டாலோ, குழுவின் முன்பு ஆஜராகவில்லை என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் ராமன், பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ், மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன், உதவி கமி‌ஷனர் மதிவாணன், நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்ந்து இக்குழுவினர் அணைக்கட்டு தாலுகா மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். நோயாளிகள், மருத்துவமனையில் குறைந்தளவே கழிவறைகள் உள்ளன. அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லை. பிரசவ வார்டில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. வி‌ஷப்பூச்சிகள் கடித்தால் அதற்கு இங்கு மருந்து இல்லை. 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்க நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும். 30 படுக்கையறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தினர்.

அதனை கேட்டறிந்த குழுவினர் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

ஆய்வின்போது மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், வட்டார மருத்துவ அலுவலர் கைலாஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுதிமொழிக்குழுவினர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

Next Story