காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் சித்தப்பா வீட்டில் நாய் வெட்டி சாகடிப்பு தொழிலாளி உள்பட 3 பேர் கைது


காதலுக்கு எதிர்ப்பு: காதலியின் சித்தப்பா வீட்டில் நாய் வெட்டி சாகடிப்பு தொழிலாளி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2018 3:00 AM IST (Updated: 29 Nov 2018 7:29 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் சித்தப்பா வீட்டில் இருந்த நாயை வெட்டி சாகடித்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை, 

செங்கோட்டை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் சித்தப்பா வீட்டில் இருந்த நாயை வெட்டி சாகடித்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதல் 

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ராமர் (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் செங்கோட்டை அருகே உள்ள திருமலாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து தச்சு வேலை பார்த்து வருகிறார். அவருடன், அவரின் அண்ணன் மகள் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், கரிசல்குடியிருப்பை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கார்த்திக் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவரம் ராமருக்கு தெரியவந்தது. உடனே ராமர், சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது தாயாரை சந்தித்து அவர்களின் காதல் விவரத்தை எடுத்துக்கூறி கார்த்திக்கை கண்டித்து வைக்குமாறு கூறிவிட்டு வந்து விட்டாராம்.

மேலும் ராமர் தனது அண்ணன் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி விட்டாராம். அந்த பெண் அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் கார்த்திக்கால் தனது காதலியுடன் பேசமுடியவில்லை.

நாயை வெட்டிக்கொன்றனர் 

இந்த நிலையில் தனது காதலியை தன்னுடன் பேச விடாமல் வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டார்களே என்று கார்த்திக் ஆத்திரத்தில் இருந்து வந்தார். உடனே அவர் தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த கோதண்டராமன் (23), செந்தில்முருகன் (19), ஆகியோருடன் சேர்ந்து ராமரை கொலை செய்வதற்காக ராமரின் வீட்டிற்கு அரிவாள்களுடன் சென்றனர். அப்போது ராமர் வீட்டில் யாரும் இல்லை. அங்கு கட்டியிருந்த நாய் 3 பேரையும் பார்த்து குரைத்தது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நாயை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

3 பேர் கைது 

இதுகுறித்து ராமர் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் உள்பட 3 பேரையும் கைது செய்து, செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கார்த்திக் உள்பட 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story