மயிலம் அருகே: விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மயிலம் அருகே: விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 29 Nov 2018 10:17 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலம், 

மயிலம் அருகே உள்ள கீழ் மயிலத்தை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 40), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. நேற்று காலை லோகநாதன் தனது மனைவி வள்ளியுடன் நிலத்துக்கு புறப்பட்டார். அப்போது அவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டு மாடியின் கீழ் பகுதியில் துணியை சுற்றி வைத்து விட்டு சென்றார்.

பின்னர் வயலில் உள்ள வேலையை முடித்து விட்டு லோகநாதனும், வள்ளியும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லோகநாதன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த துணி மணிகள் சிதறிக்கிடந்தன.

இதையடுத்து பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 6½ பவுன் நகை, 500 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணவில்லை. இவைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story