கரூர் காமராஜர் மார்க்கெட்டில் ரசாயன கலவை பயன்படுத்தி பழுக்க வைத்த 1 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்


கரூர் காமராஜர் மார்க்கெட்டில் ரசாயன கலவை பயன்படுத்தி பழுக்க வைத்த 1 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கரூர் காமராஜர் மார்க்கெட்டில் ரசாயன கலவை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கரூர்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்ட கடவூர், குளித்தலை மற்றும் திருச்சியிலும் குலைதள்ளிய வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாழைக்காய் தார்களை கமிஷன் மண்டி உள்ளிட்ட இடங்களில் ஏலத்தில் குறைந்த விலைக்கு விற்றதை காண முடிந்தது. இந்த நிலையில் கரூர் ரெயில்வே ஜங்ஷன் அருகேயுள்ள காமராஜர் மார்க்கெட் கடைகளில் அதிகப்படியான வாழைத்தார்கள் ரசாயன கலவை தெளித்து வாழைப்பழங்களாக பழுக்க வைக்கப்படுவதாக உணவுபாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரூர் உணவுபாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சசிதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கருப்பையா, முருகேசன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் காமராஜர் மார்க்கெட்டிற்குள் அதிரடியாக புகுந்து நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கடையிலுள்ள அறைகளில் “எத்திப்பான் கியாஸ்“ எனும் ரசாயனத்தை தெளித்து வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அங்குள்ள கடைகளில் இருந்து ரசாயனம் தெளிக்கப்பட்ட சுமார் 1 டன் (1,000 கிலோ எடை)வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை நகராட்சி லாரிகளில் ஏற்றப்பட்டு வாங்கல் ரோட்டிலுள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், எத்திப்பான் கியாஸ் தெளிக்கப்பட்ட வாழைப்பழங்களை சாப்பிட்டால் வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மக்களின் நலன் கருதி தான் இந்த ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வியாபாரிகள் பொதுநல நோக்கோடு செயல்பட்டு காலாவதியான பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பழங்களை பழுக்க வைக்க ரசாயனத்தை பயன்படுத்துவது கடைகளில் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

Next Story