பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை, 

மதுரை சின்னசொக்கி குளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். துபாயில் என்ஜினீயராக வேலை பார்த்தார். இவருக்கும், தல்லாகுளத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் (வயது 23) கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பவித்ரா தனது மாமியாருடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் அருகில் சியாமளா (32) என்பவர் தையல் கடை நடத்தி வந்தார்.

இவருக்கும், பவித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் துபாயில் உள்ள தனது கணவர் ஜெயக்குமாருடன் வசிப்பதற்கு பவித்ரா செல்ல இருந்தார். இதை அவர் சியாமளாவிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் ஏராளமான நகை, பணம் வைத்திருப்பார்கள் என்று சியாமளா முடிவு செய்துள்ளார்.

பின்னர் அவர் தனது கள்ளக்காதலனான ரமேஷ் (34) என்பவருடன் சேர்ந்து பவித்ரா வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். இந்த நிலையில் கடந்த 21.11.2015 அன்று காலை 11 மணியளவில் பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் அவர்கள் 2 பேரும் வீட்டுக்குள் சென்று பவித்ராவின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் கூச்சலிட்டதால் அருகில் கிடந்த கம்பியால் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

முடிவில், சியாமளா, ரமேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் சியாமளாவுக்கு ரூ.60 ஆயிரமும், ரமேசுக்கு ரூ.30 ஆயிரமும் அபராதம் விதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story