தூத்துக்குடியில் கோளரங்கம்–மீன் அருங்காட்சியகத்துடன் ரூ.6 கோடியில் பிரமாண்ட பூங்கா மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்


தூத்துக்குடியில் கோளரங்கம்–மீன் அருங்காட்சியகத்துடன் ரூ.6 கோடியில் பிரமாண்ட பூங்கா மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2018 9:30 PM GMT (Updated: 30 Nov 2018 11:27 AM GMT)

தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பில் கோளரங்கம், மீன் அருங்காட்சியகத்துடன் பிரமாண்ட பூங்கா அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பில் கோளரங்கம், மீன் அருங்காட்சியகத்துடன் பிரமாண்ட பூங்கா அமைக்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

கோளரங்கம்

தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் பொழுதுபோக்குக்காகவும், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்த பயனுள்ள நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாநகராட்சி பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் ரூ.75 லட்சம் செலவில் 76 மின்கம்பங்களில் 152 மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாளையங்கோட்டை ரோடு வ.உ.சி. கல்லூரி முதல் ஏ.பி.சி.வீ. பள்ளி வரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.6 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் பொதுமக்களை சிந்திக்கவும், வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையிலும் அறிவியல் பூங்கா, பரிணாம வளர்ச்சி குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும் கோளரங்கம், மீன் அருங்காட்சியகம், ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் தத்ரூப காட்சிகள், அலங்கார மின்விளக்குள், நீரூற்றுகள், புல்தரைகள், பல்வேறு வகையான மலர் செடிகள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

மழைநீர் வடிகால்

இந்த பூங்காவுக்கு எதிரே தற்போது உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவும் ரூ.3 கோடி செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நடைபாதை, இருக்கை வசதிகள், வண்ண நிழற்குடைகள், திறந்த வெளியில் உடற்பயிற்சி உபகரணங்கள், புல்தரைகள், மலர் செடிகள், நவீனமயமான அலங்கார மின்விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

மேலும் பாளையங்கோட்டை ரோட்டில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்காக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.180 கோடி செலவில் 3–வது மைல் முதல் பழைய துறைமுகம் வரை நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையான பாளையங்கோட்டை ரோடு புதுப்பொலிவுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மாற்றப்படுகிறது.

இவ்வாறு ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.


Next Story