மணிமுத்தாறு 1–வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


மணிமுத்தாறு 1–வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும்  கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 5:45 PM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு அணை 1–வது ரீச்சில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பாவிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை,

மணிமுத்தாறு அணை 1–வது ரீச்சில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பாவிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

நெல்லை மாவட்ட அரசு வக்கீல் சிவலிங்கமுத்து தலைமையில் மணிமுத்தாறு பகுதி 1–வது ரீச் பாசன விவசாயிகள் நயினார், பால்துரை, சோலையப்பன், சேகர் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

மணிமுத்தாறு அணை 80 அடி கால்வாய் 1–வது ரீச் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் ஆகும். எங்கள் பகுதியில் இந்த ஆண்டு மழை குறைவாக உள்ளது. மழையை நம்பி நாங்கள் நெல் நாற்று பாவி நடுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். ஆனால் குளங்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் நடவு செய்ய முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் திறக்க வேண்டும்

எனவே மணிமுத்தாறு அணை தண்ணீரை 1–வது ரீச்சில் திறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். முந்தைய ஆண்டுகளில் மணிமுத்தாறு அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் 4 ரீச்சுகளிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 2, 3, 4–வது ரீச் பகுதிக்கு முன்னுரிமை இருந்தாலும், அந்த பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. நாங்குநேரி மற்றும் திசையன்விளை பகுதியில் உள்ள கொடுமுடியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகிய அணைகளில் இருந்து இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்து பாசனம் நடைபெற்று வருகிறது. எனவே 1–வது ரீச் பகுதிக்கும் இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story