மரக்காணம் பகுதியில்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி; பெண் கைது - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு


மரக்காணம் பகுதியில்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி; பெண் கைது - கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

மரக்காணம் சந்திகாப்பான் தெருவை சேர்ந்தவர் விமல துரைநாதன்(வயது 40), இவருடைய மனைவி பியூலா (36). இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ரூ.30 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் ஆகிய சீட்டுகளில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சீட்டு பணம் முழுவதையும் கட்டி முடித்தபோதிலும் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு பணத்தை கொடுக்காமல் விமலதுரைநாதனும், பியூலாவும் ஏமாற்றி வந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விமலதுரைநாதன், பியூலா ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் மரக்காணத்தில் இருந்து வெளியூருக்கு பியூலா தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், பிருந்தா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, ராமலிங்கம் ஆகியோர் மரக்காணத்திற்கு விரைந்து சென்று பியூலாவை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரும் அவரது கணவர் விமலதுரைநாதனும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி மரக்காணம் பகுதி மக்களிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பியூலாவை போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலதுரைநாதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story