ஜனவரி 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை: எளிதில் மக்கும் பைகளை பயன்படுத்த தயாராகும் தொழில்துறையினர்
வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஆடை தயாரிப்புகளில் எளிதில் மக்கும் பைகளை பயன்படுத்த தொழில்துறையினர் தயாராகி வருகிறார்கள்.
திருப்பூர்,
தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் எளிதில் மக்கும் பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்ததும் திருப்பூர் தொழில்துறையினரிடையே கலக்கம் ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து தினமும் ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
ஆடைகள் ஒரு இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை. பிரிண்டிங், தையல் உள்ளிட்ட ஜாப் ஒர்க்குகள் செய்ய பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் ஆடை தயாரிப்பு முடிவடைவதில்லை. இறுதியில் ஆடைகள் பிளாஸ்டிக் பைகளால் தான் பேக்கிங் செய்யப்படுகின்றன. இதன் பின்னர் தான் ஆடைகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இவ்வாறாக பிளாஸ்டிக் பயன்பாடு திருப்பூர் தொழில்துறையினரிடையே அதிகமாகவும், இன்றிமையாததாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழில்துறையினரிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக எளிதில் மக்கும் பைகளை பயன்படுத்த தொழில்துறையினர் தயாராகி வருகிறார்கள். வருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவதிலும் தொழில்துறையினர் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து சிஸ்மா சங்க பொதுச்செயலாளர் பாபுஜி கூறும்போது ‘‘ தற்போது 30 சதவீதத்திற்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கும் பைகளை பயன்படுத்தி வருகிறோம். துணிகளினாலான பைகள், எளிதில் மக்கும் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என அரசு கட்டுப்பாட்டின் படி குறைந்த மைக்ரான் அளவில் உள்ள பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி வருகிறோம். தமிழக அரசு எளிதில் மக்கும் பைகளை தயார் செய்கிறவர்களுக்கு உடனே சான்று வழங்க வேண்டும். உடனே சான்று வழங்கினால் தான் அவர்கள் அந்த பைகளை தயாரித்து நடைமுறைக்கு கொண்டு வருவார்கள். அப்போது தான் திருப்பூர் தொழில்துறையினரும் ஆடைகளை பேக்கிங் செய்து அனுப்புவதில் சிரமம் ஏற்படாது.
இதுபோல் பிளாஸ்டிக் அட்டை பெட்டிகளை தவிர்த்து, எளிதில் மக்கும் அட்டை பெட்டிகளை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1–ந் தேதி முதல் எளிதில் மக்கும் பைகளை ஆடை தயாரிப்புகளில் பயன்படுத்த தயாராகி வருகிறோம் என்றார்.