காரியாபட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை; 2 ஆண்டுகளுக்குப் பின் மனைவி உள்பட 6 பேர் சிக்கினர்


காரியாபட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை; 2 ஆண்டுகளுக்குப் பின் மனைவி உள்பட 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Dec 2018 5:30 AM IST (Updated: 1 Dec 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கட்டிட தொழிலாளி கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சத்திரம்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). இவரது மனைவி பள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜா வெளிநாட்டுக்கு சென்று கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நிலையில் கடந்த 27.9.2016 அன்று மாயமானார்.

இது பற்றி அவரது மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கில் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருச்சுழி அருகே உள்ள கம்பாளியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கினார். இவர் காரியாபட்டியில் இளையராஜாவின் வீட்டருகே வசித்து வருகிறார். மணிகண்டனிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியபோது அவர் கட்டிட தொழிலாளி இளையராஜாவை கொலை செய்து அவரது உடலை கண்மாயில் புதைத்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுவதாவது:–

கட்டிட தொழிலாளி இளையராஜாவின் மனைவி முத்துலெட்சுமிக்கும், எனக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இளையராஜா வெளிநாட்டில் இருந்து வந்ததும் எங்கள் கள்ளத்தொடர்பு பற்றி அவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் முத்துலெட்சுமியை கண்டித்தார். இளையராஜா எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

கடந்த 27.9.2016 அன்று இரவு அவரது வீட்டிற்கு வெளியே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்று இளையராஜாவை இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்தேன். பின்னர் எனது நண்பர்கள் முத்துகருப்பன், கருப்பசாமி, திருக்கல்யாணி ஆகியோர் உதவியுடன் ஒரு சரக்கு வேனில் இளையராஜாவின் உடலை கொண்டு சென்று கண்மாயில் புதைத்தேன்.

இதைத் தொடர்ந்து முத்துலெட்சுமியிடம் அவரது கணவர் இளையராஜாவை காணவில்லை என போலீசில் புகார் செய்யக் கூறினேன். முத்துலெட்சுமியும் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். கண்மாயில் புதைக்கப்பட்ட இளையராஜாவின் உடலை 2 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து அங்கிருந்த எலும்புக் கூடுகளை வைகை ஆற்றில் வீசினேன். இதற்கிடையில் திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியதன் பேரில் அவர்கள் நடத்திய விசாரணையில் நான் கொலை செய்து கண்மாயில் புதைத்த சம்பவத்தை தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக சொல்லப்படுகிறது.


Next Story