தனுஷ்கோடி கடல்பகுதியில் கரைவலையில் 3 டன் சூடை மீன்கள் பிடிபட்டன; மீனவர்கள் மகிழ்ச்சி
தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பில் 3 டன் சூடை மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
ராமேசுவரம்,
புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதியில் பொதுமக்கள் வாழ்வதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மீன் பிடி தொழிலை நம்பி தனுஷ்கோடி கம்பிபாடு,பாலம்,எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட மீனவ குடுமபங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரை வலையிலும் மீன்பிடித்து வருகின்றனர்.
தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பு சீசன் தொடங்கியதால் எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று கரை வலை மீன் பிடிப்பில் 20–க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் 3 டன் சூடை மீன்கள் மற்றும் முரல், வாவல், சீலா உள்ளிட்ட பல வகை மீன்கள் பிடிபட்டு இருந்தன.
இந்த மீன்களை தரம் பிரித்து சரக்கு வாகனம் மூலம் ராமேசுவரத்தில் உள்ள கம்பெனிகளுக்கு மீனவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் தற்போது தான் 3 டன் வரை சூடை மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.